மீண்டும் மிரட்டும் கனமழை; 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!



Heavy rain threatens again red alert for 8 districts

கேரள மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்கு பிறகு ஐய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட8 மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

பலத்த மழையின் காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தனர். இந்த நிலையில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாலை 6 மணிக்கு முன்னதாகவே சன்னிதானத்தில் இருந்து கீழே இறங்கும்படி பக்தர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டது. கேரளாவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 5 விமானங்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.