குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை வழக்கு... எம்.எல்.ஏ மகன் கைது., விசாரணையில் பரபரப்பு தகவல்.!
ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், டி.ஆர்.எஸ் கட்சியின் மகனின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பல்வோஞ்சன் பகுதியை சார்ந்தவர் இராமகிருஷ்ணா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வீட்டில் இருந்த சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட இராமகிருஷ்ணாவின் இளைய மகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொத்தாகுடேம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்கொலைக்கு முன்னதாக இராமகிருஷ்ணா பதிவு செய்திருந்த வீடியோவில், எனது தற்கொலைக்கு முதற் காரணம் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (TRS) கட்சியின் எம்.எல்.ஏ வானம வெங்கடேஸ்வர் ராவின் மகன் வானம ராகவேந்தர் ராவ் தான் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விடீயோவின் அடிப்படையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், எம்.எல்.ஏவின் மகனான ராகவேந்தர் ராவின் மீது 3 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இராமகிருஷ்ணாவுக்கும் - அவரது சகோதரிக்கும் இடையே நடந்த சொத்து தகராறில், ராகவேந்தர் இராமகிருஷ்ணரின் தங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு அடாவடி செய்துள்ளார்.
இதனால் இராமகிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவரும் நிலையில், அதனால் இராமகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ மகன் ராகவேந்தரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.