மசாஜ் வலைதளத்தில் மனைவி, சகோதரியின் புகைப்படம்: போலீசாரின் துணையுடன் அதிரடி நடவடிக்கை எடுத்த வாலிபர்...!!
மசாஜ் வலைதளத்தில் தனது மனைவி, சகோதரியின் புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் பகுதியில் வசிக்கும் 31 வயது இளைஞர் ஒருவர், "மசாஜ்" சேவை குறித்த இணையதள பக்கத்தை தனது செல்போனில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட வலைதளத்தில் மசாஜ் செய்யும் பெண்களின் புகைப்படங்கள் இருந்தது. அந்தப் படங்களை பார்த்த போது, தனது சகோதரி மற்றும் மனைவியின் படங்களும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த இணையதள நிறுவனத்திற்கு போன் செய்து, தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். எதிர்முனையில் பேசிய பெண், கார் நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தன்னை சந்திக்குமாறு கூறினார். காவல்துறையினருடன் அந்த ஹோட்டலுக்கு இளைஞர் சென்றார். இணையதளத்தில் இருக்கும் தனது சகோதரி, மனைவியின் புகைப்படங்கள் பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் எவ்வித பதிலும் செல்லாமல், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உஷாரான காவல்துறையினர் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், எஸ்கார்ட் என்ற வலைத்தளத்தில் மசாஜ் செய்து கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. விளம்பரத்திற்காக அழகிய பெண்களின் புகைப்படங்களை அந்த வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன், சம்பந்தப்பட்ட இளைஞரின் சகோதரி, மனைவி ஆகியோர் தங்களது அழகான புகைப்படங்களை அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்களை எடுத்து, இந்த எஸ்கார்ட் வலைதளத்தில் பதிவேற்றி இருக்கின்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ரேஷ்மா யாதவ் என்ற பெண்ணை கைது செய்துள்ளோம். அவர் அழகான பெண்களின் புகைப்படங்களை எஸ்கார்ட் மற்றும் மசாஜ் வலைத்தளங்களில் பதிவேற்றும் கும்பலை சேர்ந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இவருக்கு பின்னால் இயங்கும் கும்பல் பற்றி விசாரித்து வருகிறோம். பெண்கள் சமூக ஊடகங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினர்.