என்ன கொடுமை! சென்னையில் ஒரு சொட்டு மழை இல்லை; கேரளாவில் ரெட் அலர்ட்.!
தமிழகத்தில் கடந்த சில மாதமாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
பானி புயலால் தமிழகம் மழை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் திசை திரும்பி ஒடிசாவை சூறையாடி அம்மாநிலத்தை தண்ணீரில் மிதக்க வைத்தது. தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை முகம் காட்டி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. ஆனால் சென்னையின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது.
சென்னையில் கடந்த 180 நாட்களில் ஒருமுறை கூட 12 மி.மீ. அளவில் கூட மழை பெய்யவில்லை என்று குறிப்பிட்டு கடந்த 20 ஆண்டு கால வரலாற்றை தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார்.
மேலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தான் தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்தது. அதுவும் கேரளாவில் தான் அதிக மழை பொலிவை கொடுக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்கும். குறிப்பாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.