கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியை அள்ளிக்கொடுக்கும் தமிழ் உள்ளங்கள்!.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது அந்த மாநிலம். கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கடும் மழை பொழிந்து வருகிறது, இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.
இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அணைகளும் நிரம்பி வருவதுடன் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மழையினால் வீடு, வாசல்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகளில் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான வருகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30 - க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லட்சமும், தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி 25 லட்சமும் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம் வருந்துகிறோம். வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.