பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்ற "நா நா குடிகாரன்" பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!
"சுவை எனும் நஞ்சு" - மனித உயிருக்கு எமனாகும் துரித உணவுகள்.. தமிழகமே தவிப்பது அம்பலம்.!
இன்றளவில் துரித உணவுகள், ஹோட்டல்கள் போன்றவை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரித்துவிட்டது. வளர்ந்த நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பிரியாணி, சிக்கன் ரைஸ் போன்றவை மிகவும் பிரபலமாகிவிட்டது. அதில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள், செயற்கை நிறமூட்டிகள் உடலின் உறுப்புகளை மிகவும் பாதிக்கும் தன்மை கொண்டவை ஆகும். இந்த விஷயம் குறித்து முகநூலில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த விழிப்புணர்வு பதிவு உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
எதையாவது தின்றுகொண்டே இருக்க வேண்டும்?
இப்பதிவில், "தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த நண்பர் ஒருவர், அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு.. உணவு.. உணவு.. தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்றுகொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது.
காலை உணவு விரைவில் நூடுல்ஸ், பாஸ்தா?
பல உணவகங்களில் இவை இல்லை. ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது. மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள், அதிகம் காணப்படுகிறது. இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன். விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம்.. தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.
பிசா, சவர்மா கடைகள்
ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன். ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது ஏன்டா ஏன். உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது. திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார். சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்.
பல் மருத்துவமனை பெருகல்
ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை. இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது. அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது. ஏன் தின்பண்டங்கள் கூடக் ஹ(க)ல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் 'த்தூ' என்று துப்பிய சுவை இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.
கண்களால் தின்கிறார்கள்
இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் டிமார்ட் போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள். அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள். உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம். உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள். முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது.
ருசி மட்டுமே
ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் ஸ்விக்கி, ஜோமடோ தூதுணவு வந்துவிட்டது. இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது, ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர். அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள்,
ஊரெங்கும் தலைவிரித்தாடும்
அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது. தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும். அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இது நடக்காவிட்டால். எழுதிவைத்துக்
கொள்ளுங்கள், அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும், இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும். படித்த விழிப்புணர்வு செய்தி 👍👍 அரியலூர் பசங்க - Ariyalur Pasanga " என தெரிவிக்கப்பட்டுள்ளது.