3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
புகைப்பிடிப்பதை திடீரென நிறுத்தினால், இப்படியெல்லாம் நடக்குமா.?!
இதற்கு முன் நீங்கள் பல ஆண்டுகள் புகை பிடித்திருந்தாலும், உங்கள் உடலின் ஆரோக்கியம் கருதி, இப்போது நிறுத்துவதால் என்னென்ன நன்மையை அடையப் போகிறீர்கள் தெரியுமா?! அதனை உடனே நிறுத்தும் போது அதிக பசி, தூங்குவதில் சிரமம் போன்ற தற்காலிக சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் அவை யாவும் இரண்டு முதல் நான்கு வாரங்களில் மறைந்து விடும்.
புகைப்பதை நிறுத்திய ஆறு மணி நேரத்தில் உங்கள் இதயத்துடிப்பு சீராகும். ரத்த அழுத்தம் நிலையானதாக மாறும். ஒரு நாளில் உங்கள் ரத்தத்தில் உள்ள நிக்கோட்டின் மற்றும் கார்பன் மோனாக்சைடின் அளவு குறையும். மேலும் ஆக்சிஜன் உங்கள் இதயம் மற்றும் தசைகளை எளிதில் சென்றடையும். ஒரு வாரத்திற்குள் சுவை மற்றும் நுகரும் தன்மை அதிகரித்திருப்பதை உணர்வீர்கள்.
புகைப்பதை நிறுத்திய மூன்று மாதங்களுக்குள், மூச்சுத்திணறல், இருமல் போன்றவை குறைந்திருக்கும். உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்படத் துவங்கி இருக்கும். இந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறிய மூன்று மாதங்களுக்குள், ஒரு பெண் தனது கருவுறுதலை மேம்படுத்துவதோடு, தன் குழந்தை முன்கூட்டியே பிறக்கும் அபாயத்தையும் குறைக்கலாம். ஆறு மாதங்களில் மன அழுத்தம் குறையும். ஓர் ஆண்டில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். இருமல் அறவே இருக்காது.
இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள், இதய நோய்க்கான வாய்ப்புகள் கணிசமாக குறைந்து இருக்கும். 10 முதல் 15 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்திலிருந்து விடுபடுவீர்கள். 20 ஆண்டுகளுக்கு பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் புகைப்பிடிக்காத ஒருவரைப் போலவே இருக்கும்.
இந்தப் பழக்கத்தை தவிர்ப்பது சற்று கடினமாக இருந்தாலும், இதனால் விளையும் நன்மைகளைக் கருதி தீர்க்கமாக முடிவெடுங்கள். புகை பிடிப்பதற்கான உந்துதலை தவிர்க்க உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். நிறைய நீர் அருந்துங்கள். சுவாசப் பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் விரல்களின் இடுக்கில் சிக்கி இருக்கும் ஒன்று, உங்கள் ஆரோக்கியத்தை அழிக்க வல்லது என்பதை எப்பொழுதும் மறவாதீர்கள்!!