ஆ.ராசா தனக்கு வேண்டியர்வர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்தார்: 2-ஜி மேல்முறையீட்டு வழக்கில் சி.பி.ஐ வாதம்..!



A. Raza made illegal allotment to his beneficiaries in 2-G appeal case

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ, மற்றும் மத்திய அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி யோகேஷ் கன்னா அமர்வு முன் தொடங்கியது.

சி.பி.ஐ, தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் ஜெயின் தன்னுடைய வாதத்தில்,  2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தொடக்கத்திலேயே முன் முடிவுக்கு வந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்பட யாருடைய பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்துள்ளார் என்று கூறினார்.