பா.ஜ.கவுக்கு பதிலடியான நிதிஷ்குமாரின் முடிவு; இந்த பதிலடி நாடு முழுவதும் எதிரொலிக்கும்: தேஜஸ்வி யாதவ் அதிரடி..!



Nitish Kumar's decision to retaliate against BJP will reverberate across the country

பீகார் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநில துணை முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். அவர் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, "

நான் சந்தித்த அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர். தற்போது அமைந்துள்ள அரசு மக்களின் அரசு, இந்த அரசு முழு வலிமையுடன் இயங்கும். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற நிதிஷ் குமாரின் முடிவு சரியான நேரத்தில் பா.ஜ.கவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி.

பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இனி நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்து, முஸ்லிம், கோயில் மற்றும் மசூதி இவற்றை சுற்றியே பா.ஜ.க-வின் அரசியல் இயங்கிவருகீறது. தற்போதைய புதிய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் விரைந்து செயல்படும். வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.