தமிழக முதல்வர் மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆளும் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை உட்பட சில பணிகளுக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் அதிகளவு நிதி ஒதுக்கி சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையை இன்று மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையம் என்பதால் முதல்வருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையானது, இந்த ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் விசாரணையானது மூன்று மாதங்களுக்குள் நிறைவடைய வேண்டும் என்றும் சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதனால் தமிழகத்தை ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.