பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஆசிய கோப்பை 2023: வெறும் 6 ஓவரில் கதையை முடித்த இந்தியா; 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை..!!
ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் இலங்கை அணியை துவம்சம் செய்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்ற இலங்கை இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறுவது இது 11 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி கொழும்பில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொண்டது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன் படி அந்த அணியின் தொடக்க ஜோடி பதும் நிசங்கா-குஷால் பெரோரா ஜோடி களமிறங்கியது. தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரிட் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 4 வது ஓவரை வீசிய முகமது சிராஜ், பதும் நிசங்கா (2), சமர விக்ரமா (0), அசலங்கா (0) மற்றும் தனஞ்செயா டிசில்வா (4) ஆகியோரை வெளியேற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார். மேலும் 6 வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகாவை (0) கிளீன் போல்டாக்கி அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
மீண்டும் 12 வது ஓவரை வீசிய சிராஜ், குஷால் மென்டிசை 17 ரன்களுக்கு வெளியேற்றினார். இதன் மூலம் 16 பந்துகளை வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சிராஜ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன் பின்னர் 13 வது ஓவரை வீசிய ஹர்டிக் பாண்டியா வெல்லாலகேவை 8 ரன்களுக்கும், 16 வது ஓவரில் மதுஷனை 1 ரன்னிலும், அடுத்த பந்தில் மதீஷா பத்திரானாவை டக்-அவுட்டிலும் வெளியேற்றினார்.
இதன் காரணமாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்டிக் பாண்டியா 3, பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து, எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷன்-சுப்மன் கில் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. அபார தாக்குதலை தொடுத்த இந்த ஜோடி முதல் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் குவித்தது. 4 வது ஓவரை வீசிய இளம் சுழற்பந்துவீச்சாளர் வெல்லாலகே இவர்களது ரன் குவிப்புக்கு சிறிது நேரம் முட்டுக்கட்டை போட்டார்.
இறுதியில் 6.1 ஓவர்களில் 51 ரன்கள் இலக்கை எட்டிய இந்திய அணி 8 வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சுப்மன் கில் 27, இஷான் கிஷன் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.