காதலித்து ஏமாற்றிய இளைஞரை போராடி கரம்பிடித்த இளம்பெண்.. வாட்சப் காதல் கைகோர்த்த தருணம்.!



Kanyakumari Colachel Man Married his Love Women Through WhatsApp

தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை, திரைப்பட பாணியில் கரம்பிடித்த பெண்மணியின் விடாமுயற்சியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் லெனின் கிராஸ் (வயது 29). இவர் எஞ்சினியரிங் படித்துள்ளார். தற்போது வளைகுடாவில் பணியாற்றி வருகிறார். வாட்சப் குழுவையும் நடத்தி வந்துள்ளார். 

இக்குழுவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசி (வயது 24) என்ற பெண்மணியும் இடம்பெற்றுள்ளார். குழுவில் பதிவிட்ட சில கருத்துக்களின் மூலமாக லெனினுக்கும் - விண்ணரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த லெனின் விண்ணரசியை நேரில் சந்தித்து இருக்கிறார். இதனையடுத்து, இருவரும் அடிக்கடி வெளியூர் சென்றும் வந்துள்ளனர். அங்கு திருமண வாக்குறுதியின் பேரில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

விடுமுறை முடிந்ததும் வெளிநாட்டுக்கு சென்ற லெனின், விண்ணரசிக்கு செலவுக்கு பணமும் அனுப்பி வந்துள்ளார். இதனால் காதலர் தன்னை திருமணம் செய்வார் என நம்பி இருந்துள்ளார். இதனிடையே, லெனினின் காதல் குறித்து அறியாத அவரின் பெற்றோர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதற்காக பெண்ணையும் பார்த்து நிச்சயம் செய்யவே, லெனினும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரியவருகிறது. கடந்த வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், லெனின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கும் வந்துள்ளார். 

அங்கு திருமணம் செய்ய பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்ட நிலையில், விண்ணரசிக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர் காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த தேவாலயத்திற்கு சென்று பாதிரியாரை சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளார். 

உண்மையை அறிந்த பாதிரியார் லெனின் கிராஸுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவே, வீண்ணரசியும் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். 

இருவரையும் சேர்ந்து வாழ அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், இருவரும் தேவாலயம் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.