பா.ஜ.க பிரமுகர் கார் எரிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது..!



Main culprit of BJP leader's car burning case arrested under National Security Act

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி பகுதியில் உள்ள 2 வது தெருவை சேர்ந்தவர் சிவசேகர். இவர் பா.ஜனதா கட்சியின் நிர்வாகியாக உள்ளார். கடந்த மாதம் இவருக்கு சொந்தமான காரை மர்மநபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மர்மநபர்களை கைது செய்ய 50க்கொ மேற்பட்ட காவல்தூறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய கமருதீன், அப்துல் வஹாப்,  நியமத்துல்லா ஆகியோரை கைது செய்தனர். கமருதீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது பஷீர் மற்றும் அமானுல்லா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கைதானவர்களில் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, ஆட்சியர் அமானுல்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து,  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமானுல்லா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.