தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்களை விற்க கோரி மனு.! அதிரடி உத்தரவை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவில் பரவி இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய பிரதமருடனான வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு கூட பணமில்லாமல் இருப்பதால் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனை அடுத்து சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதித்த சென்னை பகுதியை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால் மதுக்கடையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் கொரோனா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடிவும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய கோரி பொதுநல மனு தாக்கல் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்படி இன்று அம்மனு மீது நடந்த விசாரணையில் ஆன்லைனில் மது விற்பனைக்கு கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுப்படி செய்துள்ளனர். மேலும்
மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.