ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பெரும் சேதம்: குட்டி யானை தாக்கியதில் காவலர் படுகாயம்..!



The commotion was caused by elephants roaring into the city

கோவை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது, இதில் குட்டி யானை தாக்கியதில் காவலாளி ஒருவர் காயமடைந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் அருகே உள்ள தீத்திபாளையத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் குட்டி யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார்.

கோவை வனகோட்டம்  வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே உள்ள கரடிமடை வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 6 காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறின.

பின்னர் அந்த யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் கிராமத்துக்குள் புகுந்தன. அங்குள்ள தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகளை சாப்பிட்டும், மிதித்தும் நாசப்படுத்தின. அத்துடன் தாமோதரனின் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பாத்திரங்கள், அரிசி மூட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு அட்டகாசம் செய்தன.

இந்த சம்பவம் குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் வருவதற்குள் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தீத்திப்பாளையம் அருகே உள்ள அய்யப்பன் கோவில் வீதி மற்றும் அருண்நகர் குடியிருப்பு பகுதிக்குள் அந்த காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு சிறிது நேரம் முகாமிட்டு இருந்த யானைகள் கூட்டம் தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்றன.

அப்போது ஒரு குட்டி யானை வழிதவறி குடியிருப்பை நோக்கி சென்றதுடன், அங்கிருந்து புதருக்குள் சென்றது. இதையடுத்து வனத்துறையினர் அந்த குட்டியானையை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானை வனத்துறையினர் வந்த ஜீப்பை தாக்கியது. அத்துடன் வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டைத்தடுப்பு காவலர் நாகராஜ் என்பவரையும் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் போராடி அந்த குட்டி யானையை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள். இதையடுத்து அந்த குட்டி யானை அய்யாச்சாமி கோவில் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது