அடேங்கப்பா.. 40 ஆண்டுகளாக மழைநீர் உபயோகம்.. மருத்துவரையே சந்தித்தது இல்லை - வியக்கவைக்கும் வந்தவாசி தம்பதி.!



Tiruvannamalai Vandavasi Couple Rain Water Harvesting

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீரை சேமித்து உபயோகம் செய்துவரும் தம்பதிக்கு உடல்நலக்குறைவு என எதுவுமே ஏற்ப்படாததால் மருத்துவரை சந்தித்ததே கிடையாது. மழைநீர் உயிர்நீர் என தம்பதி பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, கீழ்சீசமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கோதையன் (வயது 76). இவரின் மனைவி ராணியம்மாள் (வயது 72). தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 

கோதையன் - ராணியம்மாள் தம்பதி 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விவசாய நிலத்தில் வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் இருந்து குடிக்க, சமையல் செய்ய இவர்கள் மழைநீரையே உபயோகம் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தம்பதிகள் தெரிவிக்கையில், "நாங்கள் கிணற்று நீர் அல்லது ஆள்துளைநீரை குடித்து இல்லை. 

மழைநீரை சேகரித்து நாங்கள் உபயோகம் செய்து வருகிறோம். மழைபெய்யும் நேரத்தில் பேரல், அண்டா உட்பட நீர் சேமிக்கும் கலனில் அனைத்தையும் சேமித்து வைத்துக்கொள்வோம். மழை பெய்ய தொடங்கினால் முதல் 5 நிமிடத்தில் ஓட்டில் இருக்கும் அழுக்கு வெளியேறிவிடும். மீதி அனைத்தும் சுத்தமான நீரே. அதனை வடிகட்டி காய்ச்சி உபயோகம் செய்வோம். 

இந்நீரை நாங்கள் சுத்தமாக பார்த்துக்கொள்வதால் புழு, பூச்சி உருவாவதில்லை. நாங்கள் மழைநீரை உபயோகம் செய்து வருவதால் எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை. மருத்துவரை நாங்கள் சந்தித்தது இல்லை. எங்களைப்பார்த்து அண்டை வீட்டார்களும் மழைநீரை பயன்படுத்தி வருகிறார்கள்" என்று தெரிவித்தனர்.