தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"2,000 காளைகள்; 500 காளையர்கள்; 1,00,000 பார்வையாளர்கள்" - கலக்கப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜனவரி 20-ம் தேதி நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கிறது. இந்த வருடம் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி கின்னஸ் சாதனை முயற்சிக்காக நடத்தப்பட உள்ளது. உலகப் புகழ் ஜல்லிக்கட்டாக மாற்றும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
``கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’’ குறித்துதான் மாவட்டம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. விராலிமலையில் ஆங்காங்கே `ஜல்லிக்கட்டு நாயகனே’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் விராலிமலையே விறுவிறுப்படைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு ப் போட்டி என்பதால், அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகம். அதற்கேற்ப, அமைச்சர் தரப்பில் ஒவ்வொரு வருடமும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது வழக்கம்.
இந்தப் போட்டி தமிழகம் முழுவதும் பேசப்படும். விராலிமலையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, அதுபற்றியே மக்கள் பேச வேண்டும் என்பதற்காக, `கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு’ என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழகத்தில் அதிக காளைகளும் அதிக காளையர்களும் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டுப் போட்டி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது என்பதுதான் அதிகமாகப் பேசப்பட வேண்டும் என்பதே ஜல்லிக்கட்டுப் போட்டியின் முக்கிய நோக்கம்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2,000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர். இந்த நிகழ்வை கின்னஸ் சாதனை நிகழ்வாக அங்கீகரிப்பதற்கு இங்கிலாந்தின் கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் மார்க், மெலினி ஆகியோர் பங்கேற்கின்றனர். போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். மேலும், போட்டியைக் கண்டுகளிக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் திரளவுள்ளனர். இதற்காக, கோயில் திடலில் வாடிவாசல் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து முடிவடைந்துள்ளது. சைக்கிள்கள், பைக், கார், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகிய பரிசுப்பொருள்கள் கொடுப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளது.
வழக்கமாக அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக விராலிமலையில்தான் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. புதுக்கோட்டை அமைச்சரே முன்னின்று நடத்துவதுதான் முக்கியக் காரணம். கடந்த ஆண்டு 1,800 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தும், 950 காளைகள் வரையிலுமே முறையாகக் களமிறக்கப்பட்டன. இந்த வருடம் கின்னஸ் சாதனை முயற்சியாக 2,000 காளைகள் வரையிலும் அவிழ்த்துவிடத் திட்டமிட்டுள்ளோம். சாதனை முயற்சியாக நடைபெறுவதால், காளைகளை அடக்கும் வீரர்கள் கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவித்து இருந்தோம். அதன்படி காப்பீடு செய்த வீரர்கள் மட்டுமே களம் இறக்கப்படுகின்றனர். நிச்சயம் இந்த வருடம் நடைபெறும் விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதோடு, உலகப் புகழ் ஜல்லிக்கட்டு என்ற அந்தஸ்து பெறும்.