மரணத்திற்குப் பிறகும் பின் தொடரும் துன்பம்.! இறுதி ஊர்வலத்தில் நீச்சலடித்து செல்லும் ஊர் மக்கள்.!
தேனி அருகே உள்ள நாகலாபுரம் என்ற ஊராட்சிக்குட்பட்ட சங்ககோணம்பட்டி என்ற கிராமத்தில், சுமார் 150 குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கென மூலவைகையாற்றின் மறு கரையில் ஒரு பொது மயானமிருக்கின்றது. மூலவைகையாற்றின் கரை முழுவதும் பாறைகளாக உள்ளதால், குழி தோண்ட முடியாத சூழ்நிலையில் ஆற்றின் மறு கரையிலிருக்கின்ற இடத்தை பொதுமக்கள் பொது மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இத்தகைய நிலையில், மழை காலங்களில் மூலவைகை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால், உயிரிழந்தவர்களின் சடலத்தை ஆற்றைத் தாண்டி எடுத்துச் சென்று, அக்கரையிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை இந்த கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மூல வைகை நதியில் கழுத்தளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தாலும், அந்த நீரில் தங்களுடைய உயிரை பணயமாக வைத்து, ஆபத்தான நிலையில், உயிரிழந்தவர்களின் சடலத்தை சுமந்து சென்று, அந்த கிராம மக்கள் இறுதிச் சடங்கை செய்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இதற்கு முன்னரே செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியினடிப்படையில், அந்த கிராமத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், புதிய பாலம் அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.
இருந்தாலும், மாவட்ட வருவாய்த் துறையின் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும், அந்த கிராம மக்கள் அருகிலுள்ள ஒரு தடுப்பணையின் வழியாக சுற்றி மயானத்திற்கு வந்து, உயிரிழந்தவர்களின் சடலத்தை எந்த விதமான ஆபத்துமில்லாமல் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.