பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னோடியாக உருவெடுக்க இந்தியா இலக்கு,..மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி..!



india-will-be-a-pioneer-in-green-hydrogen-production

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இந்திய தொழில்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இது ஏற்கெனவே பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, போர்க்கால அடிப்படையில் கொரோனாவுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் விரைவாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே இருந்தபோதிலும், அவை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (2004-2014) செயலிழந்துவிட்டன. ஆனாலும் கொரோனா தடுப்பூசியை விரைவாக தயாரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அடுத்தபடியாக பசுமை எரிசக்திக்கு மாறுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா அதிக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, உயிரி எரிபொருள் கலப்பு மற்றும் மாற்று வழிகளில் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என நம்புகிறேன். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் எரிபொருளில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முன்கூட்டியே 2025 க்குள் எட்ட முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.