தாய்லாந்து விமான நிலையத்தில் அதிர்ச்சி... எஸ்க்லேட்டரில் சிக்கித் துண்டான இளம் பெண்ணின் கால்.!
தாய்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் சிக்கிய பெண்ணின் கால் துண்டான சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என தாய்லாந்து விமான நிலைய இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் அமைந்துள்ள டான் முயாங் விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை கேட் 4 மற்றும் 5 இடையே அமைந்துள்ள நகரும் நடைபாதையில் தான் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது.
விபத்தில் சிக்கிய பெண்ணின் விபரங்களை தாய்லாந்து அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்தப் பெண் தன்னுடைய சூட்கேசில் இடறி விழுந்தபோது நகரும் நடைபாதையில் அவரது கால் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இதனால் அவரது கால் துண்டாகி இருக்கிறது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.
வலியால் அலறி துடித்த அந்த பெண்ணை விமான நிலைய ஊழியர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சாய் மாய் மாவட்டத்தில் உள்ள பூமிபோல் அதுல்யதேஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக பேசிய விமான நிலைய இயக்குனர் விபத்து ஏற்பட்ட நகரும் நடைபாதை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அந்தப் பகுதி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விமான நிலையத்தில் உள்ள அனைத்து நகரும் நடைபாதைகளும் பொறியியல் நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.