அப்படியே இருந்தா மாயாஜாலம் செய்யமுடியாது! போர் அடிச்சுரும்! தனது வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஏ.ஆர் ரஹ்மான்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் ஏ.ஆர் ரஹ்மான். இவருக்கென இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தனது பாடலுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) என்ற அமைப்பு தங்களது தூதராக ஏ.ஆர் ரஹ்மானை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வெற்றி ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
அப்பொழுது அவர், ஒரு காரியத்தை செய்து முடித்த பிறகு அதிலிருந்து விலகி விட வேண்டும். சிறந்த விஷயங்கள் கூட சில நாட்களில் போர் அடித்துவிடும். சலிப்பு என்பது எல்லோருக்கும் வரக்கூடியது. புதிய விஷயங்களை செய்தால் அதிலிருந்து மீள முடியும். எனக்கு நான் தொடர்ந்து புதிய சவால்களை விடுத்துக்கொண்டே இருப்பேன். நான் எதுவும் செய்யாமல் அப்படியே உட்கார்ந்திருந்தால் மாயாஜால விஷயங்கள் எதுவும் நடக்காது. அப்படி இருந்தால் மூளையும் வேலை செய்யாது. நம்மால் 5 நாட்களுக்கும் ஒரே உணவை சாப்பிட முடியாது. அதுபோல நம்முடைய சொகுசு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.