76 வது சுதந்திர தினம்; தேசிய கொடியில் சட்ட திருத்தம்... மத்திய அரசு அறிவிப்பு...!
நமது தேசியக்கொடியை சூரியன் உதயமாகும் பேது பறக்க விடலாம். சூரியன் அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் நம் நாட்டின் சட்ட நடைமுறையாக இருந்துவருகிறது.
ஆனால் தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை 24 மணி நேரமும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி இல்லை. தற்பொழுது இதிலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது எந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கலாம். இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வருகிற பல்வேறு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்வைகளுக்கு இந்த தகவல்களை பரப்ப வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டு சுதந்திரதினம் ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மத்திய அரசு ஹர் கார் திரங்கா (வீடுதோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்டு 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை ஒவ்வொரு வீட்டிலும் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தருணத்தில்தான், தேசிய கொடி பறக்கவிடுவது தொடர்பான மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.