கடன் மோசடிக்கு சீனாவுடன் டைரக்ட் லிங்க்.. சைனாவுக்கு ஜால்ராவாக இருந்த 8 பேர் கும்பல் கைது..!
சீன நிறுவனத்துடன் நேரடி தொடர்பு வைத்துக்கொண்டு, கடன் கொடுப்பதாக மக்களை ஏமாற்றி மோசடி செய்து வந்த 8 பேர் கும்பல் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட எல்லைப்பிரச்னைக்கு பின்னர், சீனாவின் பல்வேறு செயலிகள் இந்திய அரசால் முடக்கப்பட்டது. மேலும், சீன நிறுவனத்தின் மூலமாக கடன் தரும் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, அதன் பங்குகள் கைப்பற்றப்பட்டன.
சீனாவின் பெயரில் அல்லாமல், வேறு மோசடி பெயர்களில் இந்தியர்களுக்கு கடன் வழங்கி வரும் நிறுவனமும், அதனை செயல்படுத்தி வரும் நபர்களும் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறாக கடன் வழங்கும் நிறுவனம் முதலில் கூவிக்கூவி கடனை கொடுத்துவிட்டு, அதனை மீண்டும் வாங்குவதற்கு சட்டவிரோதமான மற்றும் கீழ்த்தரமான செயல்களை கையாண்டு வந்தது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு படை டெல்லி, ராஜஸ்தான், குருகிராம் மற்றும் ஹரியானா பகுதியில் 8 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் கடன் தருவதாக மக்களை ஏமாற்றி, மோசடி செயலில் ஈடுப்பட்டு வரும் கும்பல் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இவர்கள் அனைவரும் சர்வதேச அளவில் மோசடி பேர்வழிகளாக வலம்வந்த நிலையில், சீனாவில் உள்ள நிறுவனத்திடம் நேரடி தொடர்பு வைத்துக்கொண்டு மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர். மேலும், இவர்கள் பணத்தை பரிமாற கிரிப்டோ கரன்ஸியையும் உபயோகம் செய்து வந்துள்ளனர். இந்த மோசடி செயலில் 3 சீனர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.