அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை மஹிந்திரா குழுமத்திற்கு வரவேற்கிறேன்: ஆனந்த் மஹிந்திரா திட்டவட்டம்..!



mahindra-group-welcomes-opportunity-to-hire-talented-yo

அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

இந்திய ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 4 ஆண்டுகள்  மட்டும் பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

இதற்கு மத்தியில், அக்னிபத் திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அக்னி வீரர்களை மஹிந்திரா குழுமத்தில் பணியமர்த்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

Mahindra Group of Company

அக்னிபத் திட்டத்தை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறினேன்-& மீண்டும் மீண்டும் சொல்கிறேன்-அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும்.

அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.