கரையை கடக்கும் ‘பெதாய்’ புயல்! சேதங்களுக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



phethai getting stronger towards andhra

தென்கிழக்கு வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, 'பெதாய்' புயலாக மாறியது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, இந்த புயலானது சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும் 17 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. 

இந்நிலையில் நேற்று மேலும் வடக்கு நோக்கி நகர்ந்த பெதாய் புயல் நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 300  கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது மேலும் இந்த புயலானது மணிக்கு 26 கிலோமீட்டர் வேதத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

cyclone in andhra

மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்று மதியம் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கிலுள்ள கடற்கரைகள் புதுச்சேரி கடற்கரை மற்றும் ஆந்திராவின் கடற்கரையில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படும். இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், கடற்கரையோரத்தில் கூடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

cyclone in andhra

இந்தப் புயலின் காரணமாக ஆந்திராவில் கடலோர பகுதிகளான கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, மற்றும் குண்டூர் மாவட்டங்களில் இருக்கும் குடிசை வீடுகள், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிப்பு, மரங்கள் விழுதல், நெல், வாழை, பப்பாளி, பழவகை மரங்கள் போன்றவை சேதமடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு முடுக்கிவிட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டினம், கோதாவரி கிழக்கு, மேற்கு மற்றும் குண்டூர் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.