காலில் விழுந்து கெஞ்சியும் விடாத போலீசார்! 11 வயது சிறுவன் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்



police-attacked-and-murdered-a-man-in-up

உத்திரபிரதேசத்தில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த பிரதீப் டாமர் என்பவரை அவரது 11 வயது மகன் கண் முன்னே போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பிரதீப் தனது சகோதரரின் இருசக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக தனது 11 வயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பிரதீப்பின் மனைவி ரஜினி மிகவும் பதற்றம் அடைந்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு பிரதீப் இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டும் அவருக்கு கிடைத்தது.

இறந்த பிரதீப்பின் மனைவி ரஜினியின் சகோதரர் திகம்பரர் அவரது மனைவி ப்ரீத்தியை உறவினர்களுடன் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்துவிட்டார் என்ற வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் பிரதீப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ன சந்தேகமடைந்த காவல் துறையினர் பிரதீப் மற்றும் அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

murder in police station

ஆனால் போலீசார் கூறுவதில் உண்மை இல்லை என்றும் தனது தந்தையை போலீசார் மிகவும் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவர் காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை என்றும் பிரதீப்பின் மகன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் குடிபோதையில் இருந்ததால் தனது தந்தை பேசுவதை அவர்கள் கேட்கவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தனது தந்தைக்கு எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தனியாக ஒரு அறையில் அடைத்துவைத்ததாகவும், இதனைக் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என தன்னையும் கண்ணத்தில் போலீசார் அறைந்ததாகவும் அந்த 11 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை தொடர்ந்து அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாக உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.