பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தல்..!



Anbumani Ramadoss met Prime Minister Narendra Modi at the Prime Minister's House in Delhi

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பிரதமருடனான சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி இராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உடல்நலன் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாகவும், ராமதாஸின் உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு  கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கும்படியும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தின் நலனுக்காக காவிரி மற்றும் கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக  சம்பந்தப்பட்ட மாநிலங்களின்  முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும்  அன்புமணி பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை  உடனடியாக அமைக்க வேண்டும், ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் மோடியிடம் அன்புமணி முன்வைத்துள்ளார்.