மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: கடலூர் முழு அடைப்பு வெற்றி.. என்.எல்.சி போராட்டம் ஏன்?.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி.! முழுவிபரம் உள்ளே..!!
NLC நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய அடையாள கடையடைப்பு போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் பணியை கைவிடவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாகும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலி என்.எல்.சி நிலம் எடுப்பு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல மாவட்டம் இயல்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு கருதி மாவட்டத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் காவல் துறையினரின் பாதுகாப்போடு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கடந்த முறை ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது தமிழகமே திரண்டு போராட்டம் நடத்தி வெற்றி கண்டது. ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்பதால், மாநிலம் தழுவி நாம் அனைவரும் போராடி வெற்றிக்கண்டோம். ஆனால், அதனால் ஒரு தனிநபருக்கு அல்லது தனி கிராமத்திற்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி போன்றவை கிடைக்கபோவது இல்லை. ஆனாலும், நாம் போராடினோம். ஏனெனில் அது நமது வீரவிளையாட்டு.
ஆனால், இன்று நாம் நடத்தி வரும் போராட்டம் கடலூர் மக்களின் வாழ்வாதார போராட்டம் மட்டுமல்லாது, அதன் அண்டையில் இருக்கும் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சேர்த்து தான். என்.எல்.சி நிறுவனம் 2 ஆண்டுகளில் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. தற்போதுள்ள சுரங்கம் மற்றும் எஞ்சிய நிலங்களை வைத்தே என்.எல்.சி 30 ஆண்டுகளை கடந்து தாராளமாக இயங்கலாம். ஆனால், அவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு செவிகொடுக்காமல் செயல்பட்டு நிலத்தை எடுத்தே தீரவேண்டும் என செயல்படுகிறார்கள். நிலம் எங்களின் உரிமை. அதனை விட்டுக்கொடுக்கமாட்டோம்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் நடக்கிறது. அதனால் மிகப்பெரிய பாதிப்பை நாம் சந்திக்கவுள்ளோம். திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான போக்கை நிறுத்த வேண்டும். அடையாள கடையடைப்பு போராட்டம் முதற்கட்டம் தான். இனி அடுத்தடுத்து போராட்டம் நடக்கும். நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு நிறுத்த வேண்டும். இந்த பிரச்சனைக்கு அனைத்து கட்சியினரும் திரண்டு வாருங்கள். விவசாயிகள், மக்களின் பிரச்சனை இது. அடுத்தபடியாக புதிய வீராணம் நிலக்கரி திட்டத்தை எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு தாரைவார்க்க தயாராக இருக்கிறார்கள். வீராணம் ஏரியை சுற்றிலும் 200 இடங்களில் போர்போட்டு சோதனை செய்துவிட்டார்கள். அங்கும் நிலக்கரி எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ரசாயன கெமிக்கல் ஆலையை திறந்துவிட்டார்கள். அடுத்ததாக என்.எல்.சி., ஈரோட்டில் இருந்து சிதம்பரம் அருகே சைமா சுத்திகரிப்பு என புதிய சாயக்கழிவு சுத்திகரிப்பு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அவை அம்மாவட்டத்தை மட்டுமல்லாது பிற மாவட்ட மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும். சிலர் என்.எல்.சி தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை தருகிறது என்று கூறுகிறார்கள். தமிழகத்தின் மொத்த மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. 18 ஆயிரம் மெகாவாட்டில் என்.எல்.சி பங்கு 800 மெகாவாட் மட்டும் தான். அந்த மின்சாரத்தை நாம் வேறுமுறையில் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு என்.எல்.சி 12000 கோடி வருமானம் ஈட்டுகிறது. கடந்த ஆண்டு 2400 கோடி கூடுதல் வருமானம்.
கடந்த 55 ஆண்டுகளாக இவர்கள் மொத்தமாக 55 ஆயிரம் கோடியை வடமாநிலங்களில் முதலீடு செய்துள்ளார்கள். இதே திமுக அமைச்சர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சியை எதிர்த்து போராடுகிறார். இன்று என்.எல்.சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதேபோல மாவட்ட ஆட்சியர் அமைச்சருக்கு மேல் செயல்படுகிறார்கள். நீங்கள் அரசு அதிகாரிகளோ? என்.எல்.சி தரகர்களா?. இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் குடிக்க குடிநீர் அங்கு கிடைக்காது. ஆண்டுகள் செல்லச்செல்ல கடலூர் மாவட்டமே பாதிக்கப்படும். என்.எல்.சி-க்கு எதிராக அனைத்து கட்சியினரும் திரண்டு வர வேண்டும். என்.எல்.சிக்காக ஆதரவாக குரல் கொடுக்க நினைப்போர், அங்குள்ள 40 ஆயிரம் ஏக்கர் பாலைவனமாக மாறுவதை கண்டும் அப்படி சொல்வது ஏன்?.
என்.எல்.சி விளை நிலங்களை ஏற்கனவே பாழாக்கி, மீண்டும் கூடுதல் விளை நிலைகளை கேட்பது ஏன்?. கோவை அன்னூர் சிப்காட் வளாகத்திற்கு 1200 ஏக்கர் நிலத்தை எடுக்க கூடாது என அதிமுக, பாஜக போராடுகிறது. அவர்கள் கடலூருக்கு வராதது ஏன்?. தன்னூற்று கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து கடலூர் நெய்வேலியில் இருந்தது. இன்று என்.எல்.சி சுரங்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடி சென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் தன்னூற்று நிலை அப்படியே இருக்கிறது. நேற்று சீமான், எடப்பாடி ஆகியோர் என்.எல்.சிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அனைவரும் வாருங்கள். அரசியல் பார்வை இன்றி மக்களுக்காக வாருங்கள். என்.எல்.சி தரகராக காவல்துறை, அதிகாரத்தை வைத்து மக்களை அச்சுறுத்தி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நிலத்தை பிடுங்கி என்.எல்.சிக்கு கொடுக்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி வெளியேறு என போராட்டம் நடத்தினார்.
முழு அடைப்பு மக்களை அவதிப்படுவது இல்லை. அது எங்களின் நோக்கமும் இல்லை. என்.எல்.சி விவகாரத்தில் மக்கள் தங்களின் எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும். அடுத்தடுத்த போராட்டங்கள் வேறுவிதமாக இருக்கும். கடலூர் மாவட்டம் 5 ஆறுகள் சங்கமிக்கும் பகுதி. எங்கு மழை பெய்தாலும் கடலூர் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படும். என்.எல்.சி நிறுவனமும் தனது நிலங்களில் உள்ள நிலத்தை வெளியேற்றும். அதனால் வெள்ளம் அதிகரித்து மக்கள் பலியாவார்கள். என்.எல்.சியில் உள்ள உயர் அதிகாரிகள் பீகார் போன்ற வடமாநிலங்களில் இருந்து வந்து தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை, அங்குள்ள மக்களுக்கு துரோகம் என பல கொடுமைகள் நடக்கிறது. முப்போகம் விளையும் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இன்று பாதுகாக்க வரவில்லை என்றால், எதிர்காலத்தில் கடலூர் மாவட்டம் ஒட்டுமொத்தமாக பாலைவனமாகிவிடும்" என்று பேசினார்.