வெறும் 16 ஓட்டுகளில் தோல்வியடைந்த பெண் வேட்பாளர்..!! கதறி அழுத சோக சம்பவம்..!!



Congress candidate Sowmiya leaves home in tears after losing Jayanagar constituency by 16 votes

ஜெயாநகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா அழுது கொண்டே வீட்டுக்கு புறப்பட்டார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 113 தொகுதிகளை கைப்பற்றுவது அவசியம். ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன. 224 தொகுதிகளில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா 66 தொகுதிகளிலும், ம.ஜ.த 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராமமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சவுமியா, ம.ஜ.த சார்பில் கலிகவுடா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில்  பா.ஜனதா வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 16 என்பது குறிப்பிடத்தக்கது. 16 வாக்குகள் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.