குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விவகாரம்.. முழுவதுமாக ஏமாற்றும் திமுக?..! எதிர்கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024 பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, அதிமுகவினர் அமளி செய்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடையே எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "திமுக அரசு மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறினார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு நீட் ரகசியம் சட்ட ரீதியாக போராட்டம் செய்வது என்று கூறுகிறார்கள்.
நாங்களும் இதையேதான் செய்தோம். நீட் ரகசியத்தை இப்போது கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 2 லட்சம் கோடி அரசு கடன் வாங்கியுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.750 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினம்தினம் கொள்ளை, வழிப்பறி, கொலை போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
மாணவர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தி சீரழிந்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 மாதம் வழங்கப்படும் என்று கூறினார்கள்.
இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1000 எனக் கூறுகிறார்கள். எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது?, யாருக்கெல்லாம் இதனை கொடுப்பார்கள்? அதற்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள். இது முற்றிலும் ஏமாற்றக்கூடிய விஷயமே என்று தெரிவித்துள்ளார்.