மீண்டும் கோர்ட் படியேறும் பொதுக்குழு விவகாரம்: ஓ.பி.எஸ் தரப்பினரை முந்திக் கொண்டு கேவியட் மனு தாக்கல் செய்த ஈ.பி.எஸ் தரப்பு..!



It is a matter of general assembly to go to court again

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2 ஆம் தேதி பரபரப்பான தீர்ப்பினை அளித்தது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், 'அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாதபோது இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. இதன் காரணமாக தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பில், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில் 'அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.