'அக்னிபத்' நாட்டுக்கான திட்டம் இல்லை; பா.ஜ.க-வுக்கு தனியாக ஆயுதப்படையை உருவாக்கும் திட்டம்: மம்தா பனர்ஜி பகீர் குற்றச்சாட்டு..!



Mamata Banerjee has accused the BJP of trying to create its own armed forces using the 'Agnipath' scheme.

'அக்னிபத்' திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜ.க தனக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி செய்வதாக மம்தா பனர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 4 ஆண்டுகள்  மட்டும் பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் 'அக்னிபத்' திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜ.க தனக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

'அக்னிபத்' திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜ.க தனக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. 4 ஆண்டு கால பணி முடிவடைந்த பிறகு பணியிலிருந்து விடுவிக்கப்படும் அக்னி வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்க பா.ஜ.க விரும்புகிறது.

அக்னி வீரர்களை தங்களது கட்சி அலுவலகங்களுக்கு காவலாளிகளாக நியமிக்க பா.ஜ.க  திட்டமிடுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க  இது போன்ற திட்டங்களை அறிவித்து மக்களை முட்டாளாக்க நினைக்கிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ.க, தற்போது முட்டாள்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.