பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழக மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்துவதா?!; தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா?!: சீமான் கண்டனம்..!
திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாக செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவர்களை உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது உள்ளக்கொதிப்பைத் தருகிறது. கேரளாவில் வழிபாட்டுக்குச் சென்ற சாந்தவேலு எனும் தமிழர், அந்நிலத்தில் வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டதும், காவிரிச்சிக்கல் பேசுபொருளாகும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், ஆந்திரக்காட்டுக்குள் 20 தமிழர்களை அம்மாநிலக் காவல்துறை சுட்டுக்கொலை செய்ததுமான இனவெறிச்செயல்களின் நீட்சியாகவே, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுந்துயரம் அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தமிழர்கள் நாங்கள் பெருத்த சனநாயகவாதிகள்; பெருந்தன்மையாளர்கள். ஆகவேதான், பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டபோதிலும் நாங்கள் அறவழியில் நீதிகேட்டு நிற்கிறோம். எங்களது சனநாயக உணர்வையும், பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, இனியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிடலாமென்று கணக்கிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கிறேன். எந்தவிதத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த கொடுங்கோலர்களின் கோரத்தாக்குதலுக்கு எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா?https://t.co/Ovrszb0mQm@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/meDaWkqwF9
— சீமான் (@SeemanOfficial) October 23, 2022
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழக மாணவர்களும், மக்களும் தாக்கப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கு தனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, தாக்குதல் தொடுத்த குண்டர்களை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதுசெய்ய ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், ஆந்திராவிலுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.