#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு ஒரே ஒரு குறைதான்" - தி.மு.க தலைவராக பதவியேற்ற ஸ்டாலின் உருக்கமான பேச்சு
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். அதன்பின் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
திமுக தலைவராக தான் ஆற்றிய முதல் உரையிலேயே தொண்டர்களின் மனதில் நீங்க இடம்பிடிக்கும் அளவிற்கு மனமுருகி பேசியுள்ளார். அப்போது அவர் "எனக்கு ஒரே ஒரு குறைதான், இன்றைய பொதுக்கூட்டத்தில் நடைபெறும் காட்சிகளைக் காண கலைஞர் இல்லையே" என மனவருத்தத்துடன் சொற்பொழிவாற்றினார்.
மேலும் பேசிய அவர், ``என் பெயரின் அர்த்தம் உழைப்பு என்று கூறியே கலைஞர் என்னை வளர்த்தார். பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் நான் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்பேன். என்னைவிட எனக்குக் கழகம்தான் பெரிது.
எனக்கு ஒரே ஒரு குறைதான் இன்றைய பொதுக்கூட்டத்தில் நடைபெறும் காட்சிகளைக் காண கலைஞர் இல்லையே. என் அப்பா இங்கு இல்லை என்றாலும் அவரின் இடத்தில் என் பெரியப்பாவான அன்பழகன் இருக்கிறார். நான் கருணாநிதியின் மகன் என்று சொல்வதைவிட அவரின் தொண்டன் எனச் சொல்வதிலேயே எனக்குப் பெருமை. தி.மு.க-வை நெஞ்சில் சுமந்து முற்றிலும் புதிய எதிர்காலத்தை நோக்கி கட்சியையும் தமிழகத்தையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
தமிழகத்தை ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிப்பதே நமது முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிந்து அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிக்க வேண்டும்.
தி.மு.க-வின் மரபணுக்களைச் சுமந்து புதிய கனவுகளோடு இன்று நான் புதிதாய் பிறந்துள்ளேன். என் கனவுகளை மெய்ப்பிக்கத் துடிக்கிறேன். இது என் தனி ஒருவனால் முடியாது. உடன் பிறப்புகளே என்னோடு வாருங்கள், சில அடிகள் முன் வைக்க அல்ல, தேவைப்பட்டால் சில அடிகள் பின்னோக்கிச் செல்லவும் என்னுடன் வாருங்கள். நான் முன்னே செல்கிறேன் நீங்கள் பின்னே வாருங்கள் என நான் அழைக்கவில்லை, வாருங்கள் அனைவரும் சேர்ந்து செல்வோம். நானும் ஒரு தொண்டன்தான் இங்கு அனைவரும் சமம்.
அவரில்லாத கோபாலபுரம், அவரில்லாத அண்ணா அறிவாலயம் அவரில்லாத இந்த மேடை இதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால், கழகத்தின் இவ்வளவு பெரிய பொறுப்புகளை என் மீது சுமத்திவிட்டு கலைஞர் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். என் இதயம் அவருடையது. கலைஞர் அண்ணாவிடம் பெற்ற இதயம்தான் இப்போது என்னுள் உள்ளது. என் உயிர் உள்ளவரை என் உயிரினும் மேலான தமிழினத்துக்காக உழைப்பேன்” எனப் பேசினார்.