89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல்!.. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்: மும்முனை போட்டியால் விறுவிறுப்பு..!
குஜராத்தில் வியாழக்கிழமையான இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 தொகுதிகளை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில் அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள பாஜக முழுமுனைப்புடன் செயல்படுகிறது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்கிடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. 89 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரசும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். இவர்களில், 70 பேர் பெண் வேட்பாளர்கள், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். நேற்று முன்தினம் மாலை ஐந்து மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற இருக்கின்ற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 3,311 வாக்கு சாவடிகள் நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முழுவதும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் இரண்டு கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இடைவெளியின்றி 5 மணி வரை நடக்கிறது. இதற்காக மின்னணு வாக்கு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை எந்திரங்கள், அழியாத மை போன்ற சாதனங்களும், பொருட்களும் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 89 தொகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.