மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எகிறும் எதிர்பார்ப்பு: அ.தி.மு.க அலுவலக சாவி யாருக்கு?!.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
அ.தி.மு.க தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சென்னை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அ.தி.மு.க அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் முறையிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அதன்படி, அ.தி.மு.க தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில், ஜீன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அ.தி.மு.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இன்றைய வழக்கு விசாரணை மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.