ஆசிய கோப்பை தொடர்: ஆதிக்கத்தை நிலைநாட்டுமா இந்தியா?!: பாகிஸ்தானுடன் இன்று மோதல்..!



Asia Cup series: Will India maintain dominance?

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று  நடைபெறவுள்ள 2 வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மோதினால், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.

இரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தான் அணியுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுதி இல்லை என்று  இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இரு அணிகளும் ஐ.சி.சி தொடர்களில் மட்டும் மோதி வருகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த டி- உலக கோப்பை லீக் சுற்றில் முதன் முறையாக இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் மோசமாக தோல்வியடைந்தது. இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இது இந்திய அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இன்று நடைபெறும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் விபரம்:-

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுவவேந்திர சாஹல், அவேஷ்கான்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.