கடந்த உலகக்கோப்பையில் பயன்படுத்திய பவுண்டரி முறையில் வெற்றி! இனிமேல் அது கிடையாது! ஐசிசி அதிரடி!
உலகக் கோப்பை தொடர் இந்தவருடம் விறுவிறுப்பாக நடந்தது. இந்திய அணிதான் கோப்பையை கைப்பற்றும் என்று உலகமே எதிர்பார்த்தநிலையில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் தலா 241 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதனையடுத்து யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க சூப்பர் ஓவரை பயன்படுத்தினர். ஆனால் அந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்தது. இதனையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.
ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து பல சர்ச்சைகள் கிளம்பியது. இந்த முடிவை பல கிரிக்கெட் வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஐசிசி தொடர்களில் அரையிறுதி, பைனலில் பவுண்டரி அடிப்படையில், போட்டி முடிவு என்ற முறையை ஐசிசி நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக, முடிவை எட்டும் வரை சூப்பர் ஓவர் முறையை கடைபிடிக்கவும் ஐசிசி முடிவு செய்துள்ளது.