மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்திய அணி..!! சரணடைந்த பாகிஸ்தான்..!!
ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்று முன்தினம் தொடங்கிய சூப்பர்-4 சுர்றின் 2வது போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி இந்திய அணியின் இன்னிங்ஸை சுப்மன் கில்-ரோஹித் சர்மா ஜோடி தொடங்கியது.
தொடக்கத்தில் ரோஹித் சர்மா பொறுமையாக தொடங்க, பட்டாசாய் வெடித்த சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் பின்னர் ஷதாப்கானின் சுழற்பந்துவீச்சை விளாசிதள்ளிய ரோஹித் சர்மாவும் அரைசதம் கடந்தார். இது அவருக்கு 50வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான தொடக்கம் கண்ட இந்த ஜோடி 16.4 ஓவரில் பிரிந்தது, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. முதலில் 56 (49) ரன்களுடன் ரோஹித் சர்மாவும், அடுத்ததாக 17.5 ஓவரில் சுப்மன் கில் 58 (52) ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இணைந்த விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.
24.1 ஓவரின் இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழையின் குறுக்கீட்டால் போட்டி ரத்து செய்யப்பட்டது. மாற்று நாளான நேற்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. நங்கூரமாக நிலைத்து நின்ற விராட் கோலி-கே.எல்.ராகுல் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது.
கே.எல்.ராகுல் 100 பந்துகளிலும், விராட் கோலி 84 பந்துகளிலும் சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் 45 ஓவர்களில் 300 ரன்களை கடந்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 111 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 356 ரன்கள் இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் ஜோடி தொடக்கம் அளித்தது. இமாம்-உல்-ஹக் 9 ரன்களுடன் ஜஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சிலும், பாபர் அசாம் 10 ரன்களுடன் ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் போட்டி தொடங்கிய போது குல்தீப் யாதவ்-ரவீந்திர ஜடேஜா சுழல் கூட்டணியை சமாளிக்க முடியாமல் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். 32 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக பஹர் ஜமான் 27 ரன்களும், இப்திகர் அகமது, ஆஹா சல்மான் தலா 23 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.