ஆசிய கோப்பை தொடர்: ஆதிக்கத்தை நிலைநாட்டுமா இந்தியா?!: பாகிஸ்தானுடன் இன்று மீண்டும் மோதல்..!



India vs Pakistan in Super 4 Round 2 Match of Asia Cup Cricket Series

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் 15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் நேற்று நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் சுற்று போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும், 2 வது லீக் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.

பாபர் அசாம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலாவது லீக் போட்டியில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. ஆனால் இரண்டாவது லீக் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதுடன் 'ஏ' பிரிவில் 2 வது இடம் பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி 10.4 ஓவர்களில் 38 ரன்னுக்குள் அந்த அணியை சுருட்டி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து 2 வது வெற்றியை ருசிக்க இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச டி-20  கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இவற்றில் 8 போட்டிகளில் இந்தியாவும், 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

ஆடுகளம் 2 வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருப்பதால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் பின் வருமாறு:-

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்‌ஸர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன்.