இளம்பெண்ணை கொன்ற வழக்கு விவகாரம்: 21 வயது இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!



A 21-year-old youth was charged with the goondas law in the case of killing a young woman

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் உள்ள நடுத் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் வேலூரில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் காரை கூட்டுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 6 தேதி காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், மனமுடைந்த மாணவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், அவரை விடாமல் விரட்டிச்சென்ற சதீஷ்குமார் திருவலம் காவல் நிலையம் அருகே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவலம் காவல் துறையினர், சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சதீஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சதீஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். அதற்கான நகலை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமாரிடம் இன்று வழங்கினர்.