மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் கொலை வெறி தாக்குதலில் சிக்கிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர்!,, 30 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்..!
கர்நாடக மாநிலம், குல்பெர்கா மாவட்டம், கமலாப்புரா காவல் நிலைய அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள பீதர் மாவட்ட எல்லையில் உம்கார் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாகவும், அங்கிருந்து வாங்கி வந்து விற்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க குல்பெர்கா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் தலைமையிலான காவல்துறையினர் உம்கார் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்று இருந்தனர். பின்னர் அங்கு கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்பட்டு வரும் தோட்டத்தை கண்டுபிடித்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த 30 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் காவல்தூறையினரை வெறித்தனமாக தாக்கியது.
கொலைவெறி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத காவல்துறையினர், அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பலிடம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மட்டும் வசமாக சிக்கினார். இதனையடுத்து, அவர் மீது 30 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது. உயிருக்கு போராடிய ஸ்ரீமந்த்தை உம்கார் காவல்துறையினர் மற்றும் கர்நாடக காவல்துறையினர் இணைந்து மீட்டதுடன் பசவகல்யாணில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக குல்பெர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீமந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குல்பெர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இஷா பந்த் நிருபர்களிடம் பேசியபோது, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை வெகு விரைவில் கைது செய்வோம் என்று கூறியுள்ளார்.