அன்னவாசலில் அதிமுக - திமுக பயங்கர மோதல்... காவல்துறை தடியடி.! மறைமுக தேர்தலில் சம்பவம்.!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டில் 8 இடங்களில் அதிமுகவும், 6 இடங்களில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி அடைந்தனர். சுயேச்சை வேட்பாளரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்.
இந்நிலையில், மார்ச் 2 ஆம் தேதி அன்னவாசல் பேரூராட்சியில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், முற்பகலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த 5 பேர், திமுக கூட்டணி - காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் என 6 பேர் பதவியேற்றனர். பிற்பகல் நேரத்தில் விராலிமலை நகரில் இருந்து 35 க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுகவினர் 8 பேர், சுயேச்சை ஒருவர் என 9 பேர் வந்தனர்.
இவர்கள் 9 பேரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பதவியேற்றனர். பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணியளவில் அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்துவிட, திமுகவை சேர்ந்த ஒருசில கவுன்சிலர்கள் வந்தனர்.
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் திமுகவினரும் என திரண்டு இருந்தனர். அப்போது, இருகட்சியை சேர்ந்தவர்களும் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினர் காவல்துறை தடுப்பை மீறி பேரூராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதனால் நிகழ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி அதிமுக - திமுக தொண்டர்கள் மோதிக்கொள்ளவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைத்தனர். பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருவதால் 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.