பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்..! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! என்ன காரணம்.?



anbumanai ramathas talk about school open

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுவந்தது. இந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழகத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு பள்ளிகள் நடந்துவந்தது.

இந்தநிலையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்தநிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது! பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?

பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.