அபேஸ் போட்ட அண்ணனின் பணம்.. திசை திருப்புவதற்காக மகனுக்கு விஷம் கலந்த டிபன் பாக்ஸ்.. அதிர்ச்சி பின்னணி..!
செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்திரன். இவருக்கு 6 வயதில் குருதேவ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற குழந்தை மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளது.
இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக குருதேவ்வை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலச்சந்திரத்திற்கு தம்பி உறவுமுறை கொண்ட மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவர் சிறுவனுக்கு மதிய உணவு கொண்டு வந்து கொடுத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனிடம் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். விசாரணையில் பாலச்சந்திரத்தின் வீட்டிலிருந்த ஏ.டி.எம் கார்டை அவருக்குத் தெரியாமல் மணிகண்டன் திருடி சென்று அதிலிருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறியாமல் பாலச்சந்திரன் பணம் எடுக்க வங்கிக்கு சென்ற போது கணக்கில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து பாலச்சந்திரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் அளித்த புகாரால் மணிகண்டன் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளுவோமோ என்ற பயத்தில் இதனை திசை திருப்புவதற்காக பாலச்சந்தரினின் மகன் குருதேவுக்கு வயலில் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை டிபன் பாக்ஸில் கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் எங்கே போலீசார் நம்மை கைது செய்து சிறையில் வைத்து விடுவார்களோ என்று அஞ்சி மணிகண்டன் மீதமிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.