வாயில் குத்தி முதுகில் வெளிவந்த கம்பி.. சிறுவனின் உயிரை காப்பாற்றிய எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.!



Chennai Egmore Children Hospital Doctors Remove Steel bar from Child Mouth

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திம்மாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் குழந்தை இயேசு (வயது 40). இவரின் மனைவி செலின். இவர்கள் இருவருக்கும் 2 வயதுடைய ஆல்வின் ஆண்டோ என்ற குழந்தை உள்ளது. இவர்களது வீட்டருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை 7 ஆம் தேதி, குழந்தை கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். 

அப்போது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ஆல்வின் எதிர்பாராத விதமாக தலைகுப்பற விழுந்துள்ளார். இதனால் தொட்டியில் இருந்த இரும்பு கம்பி குழந்தையின் வாய் வழியாக குத்தி, முதுகு பகுதி வெளியே வெளிவந்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியுடன் வந்த பெற்றோர், உடனடியாக கட்டுமான பணியாளர்கள் உதவியுடன் கம்பியை வெட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

chennai

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். எழும்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மருத்துவர் வேல்முருகன் தலைமையிலான மருத்துவர்கள் 45 நிமிட அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றினர். 

இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர் வேல்முருகன் தெரிவிக்கையில், "குழந்தையின் வாயில் குத்தியிருந்த கம்பி 59 செ.மீ நீளம் கொண்டது. கம்பி குத்திய பகுதி குழந்தையின் சுவாச குழல், மூளையின் இரத்தக்குழாய், நரம்பு மண்டலம் அருகே இருந்துள்ளது. சற்று சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவர்கள் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கம்பியை அகற்றினோம்" என்று தெரிவித்தார்.