அரசு பேருந்தை மறித்து பஸ் டே கொண்டாட்டம்., பாலாபிஷேகம்.. 30 பேர் மீது வழக்குப்பதிவு.!
சென்னையில் உள்ள கண்ணதாசன் நகரில் இருந்து பிராட்வே நோக்கி, வழித்தட எண் 64 B கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. அப்போது, பேருந்து நிறுத்தத்தில் இருந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தை மறித்துள்ளனர்
மேலும், பேருந்து தின கொண்டாட்டம் என ரகலையை தொடங்கிய நிலையில், பேருந்தின் முன்புறம் கேக் வெட்டி, நடத்துனரின் முகத்தில் தடவி அட்டகாசம் செய்துள்ளனர். மேலும், பேருந்தின் மீது பாலை ஊற்றி பரபரப்பு கோஷத்துடன் முழக்கமிட்டுள்ளனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதறியுள்ளனர்.
பேருந்து சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட, சம்பவ இடத்திற்கு செம்பியம் காவல் துறையினர் விரைந்துள்ளனர். அதிகாரிகளை கண்டதும் அலப்பறை கும்பல் சிதறியோட, பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பந்தர் கார்டன் பகுதி அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், 30 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பனிரெண்டாம் வகுப்பு மாணவர், அவருடன் வந்த கல்லூரி மாணவர்கள் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.