6 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் எதிரொலி.! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி தடை.!
கேரள மாநிலத்தின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த 4-ந் தேதி அறிவித்தது. இதனையடுத்து, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை முதன்மைச் செயலாளர் அறிவுரையின்படி, இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள தற்காலிக சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்களால் கண்காணிக்கப்படுகிறது. இந்த குழுக்கள் மூலம், கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகள் தமிழகத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென கோழிகள் அதிக அளவில் இறந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உண்ணும்போது பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. பொதுவாகவே இந்நோய், மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது .