ஊரடங்கால் குடும்ப வறுமை.! பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி பேராசிரியர் பலி.! பரிதவிக்கும் கர்ப்பிணி மனைவி.!
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகரை சேர்ந்தவர் லோகநாதன். 34 வயது நிரம்பிய இவர், ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா பரவலால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் தனியார் கல்லூரி பேராசிரியர் லோகநாதன்.
தனது குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அறுத்து கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் லோகநாதன். இந்தநிலையில் லோகநாதன், பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த லோகநாதனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்லூரி பேராசிரியர் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான லோகநாதனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
இந்தநிலையில், ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்ட சென்று தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிறைமாத கர்ப்பிணியாகவும் 2 வயது கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு அரசு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.