ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால் பலியான கல்லூரி மாணவர்... திருமங்கலத்தில் சோகம்...!



College student killed after getting off moving train...Tragedy in Thirumangalam...

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவர் தவறி விழுந்து உடல் துண்டாகி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி ரயிலில் இருந்து கல்லூரி மாணவர் ஒருவர் இறங்கிய போது தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கியதில், உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பன்னீர்குண்டு பகுதியில் வசித்து வருபவர்கள் மணிகண்டன், பிச்சையம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் சண்முகபிரியன், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சென்றுள்ளார். விரைவு ரயில்கள் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காது. எதிர் திசையில் வரும் ரயிலுக்கு வழி விடுவதற்காகவும், சிக்னல் கோளாறு ஏற்பட்டால் மட்டுமே அங்கு விரைவு ரயில்கள் நிற்கும். 

இதனால், இந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்ஸில் மீண்டும் திருமங்கலம் வருவது வழக்கம். தற்போது திருமங்கலம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பகல் வேளையில் இந்த வழியாக செல்லும் விரைவு ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. 

சண்முக பாண்டியனும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயிலில் இருந்து இறங்கிய போது கால் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தார்‌. சண்முகபாண்டியன் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.